திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக, தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்டங்களில் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணையிலும் தண்ணீர் இல்லாத சூழல் நிலவுகிறது.
இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை பெய்யாத காரணத்தினால், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் பாலம் பாலமாக வெடித்துக் காணப்படுகின்றன. எனவே, தமிழக அரசு உடனடியாக டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு விவசாயிகளின் முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நடப்பாண்டில் தண்ணீர் இன்றி கருகிவரும் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.









