திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜண்டா மேடு ஆற்றுமேடு கூட்டுச் சாலைப் பகுதியில், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து இப்பகுதி வழியாகத்தான் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இத்தகைய முக்கியச் சாலையில் மின்கம்பிகள் கையில் எட்டும் தூரத்தில் மிகத் தாழ்வாகக் தொங்குவதால், விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும், இப்பகுதியில் இரவு நேரங்களில் வெளிச்சம் தந்து கொண்டிருந்த உயர்கோபுர மின்விளக்கு, பாலாற்றுப் பராமரிப்புப் பணிகள் காரணமாக தற்போது எரியவில்லை எனக் கூறப்படுகிறது. அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து பாலாற்றுப் பகுதியைப் பராமரித்திருந்தாலும், துறை சார்ந்த அதிகாரிகள் இதுபோன்ற பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரிய மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளைச் சீரமைக்க வேண்டும் என்றும், பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை மீண்டும் எரியச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.









