திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய் பிறந்தான் கிராமத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகத்தில் தங்கிப் பயின்ற மாணவிகள் 4 பேர் மற்றும் காப்பக ஊழியர் ஒருவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவத்தின் பின்னணி:
திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (16), வள்ளியம்மாள் (16), அல்லி (14), பூமிகா (13) ஆகிய மாணவிகள் மற்றும் அவர்களைக் காப்பாற்றச் சென்ற காப்பக ஊழியர் தேன்மொழி ஆகியோர் சமுத்திரம் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த பூமிகா, அல்லி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் உடன் பிறந்த சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முற்றுகைப் போராட்டம்:
இந்த துயரச் சம்பவத்திற்கு காப்பக நிர்வாகத்தின் மெத்தனமே காரணம் என்று குற்றம் சாட்டிய உறவினர்கள், காப்பகத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும், உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் உண்மையை மறைக்க முயல்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.









