திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு சுருக்க முறை திருத்தல் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இதுவரை மொத்தம் 9,581 விண்ணப்பங்கள் நேரடியாகப் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in மற்றும் ECINet கைப்பேசி செயலி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்காக, வரும் நவம்பர் 29-ம் தேதி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தகுதியுள்ள வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.









