திருநெல்வேலி மாநகரப் பகுதியில், 'Grindr' செயலி மூலம் நபர்களைத் தொடர்புகொண்டு, அவர்களைக் குறிவைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 20 வயது இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாளையங்கோட்டை செல்வன் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த விஜயபாண்டியனின் மகன் பிரபாகரன் (20), சமூக வலைதள செயலியான 'Grindr' மூலம் ஓரினச்சேர்க்கை பழக்கமுடைய நபர்களைத் தொடர்புகொண்டு, அவர்களை மிரட்டி பணம் மற்றும் உடைமைகளைப் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடைய இத்தகைய தொடர் குற்றச் செயல்கள் பொது ஒழுங்கிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் அளித்த பரிந்துரையின் பேரில், மாநகர காவல் ஆணையர் பிரபாகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், கடந்த நவம்பர் 18, 2026 அன்று அவர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.









