தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே காமாட்சிபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியின் பிறந்தநாள் வாழ்த்து பேனர் மீது மாட்டுச்சாணம் வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அணைக்கரை - பந்தநல்லூர் சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கமான உழவர் பேரியக்கத்தின் மாநிலத் தலைவராக இருந்து வருபவர் கோ. ஆலயமணி. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கடைவீதியில் கட்சியினர் சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த இந்த பேனர் அப்பகுதியில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் அந்த பிறந்தநாள் வாழ்த்து பேனர் மீது மாட்டுச்சாணத்தை வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இன்று காலை இதனை பார்த்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காமாட்சிபுரம் கடைவீதியில் திரண்டனர். தொடர்ந்து, பேனர் மீது மாட்டுச்சாணம் வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அப்பகுதியில் தொடர்ந்து கட்சியின் விளம்பர பேனர்கள் சேதப்படுத்தப்படுவதுடன், திட்டமிட்டு பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டி, அணைக்கரை - பந்தநல்லூர் சாலையை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பந்தநல்லூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேனர் மீது மாட்டுச்சாணம் வீசிய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அணைக்கரை - பந்தநல்லூர் சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். பேனர் மீது மாட்டுச்சாணம் வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல்
பாமக நிர்வாகி பேனர் மீது மாட்டுச்சாணம் வீச்சு: சாலை மறியலால் பரபரப்பு
🕒 21 நவ., 2026, 09:58 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •தஞ்சாவூர் மாவட்டம் காமாட்சிபுரத்தில் பாமக நிர்வாகி கோ. ஆலயமணியின் பிறந்தநாள் பேனர் மீது மாட்டுச்சாணம் வீசப்பட்டதால், கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








