திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இது முருகப்பெருமானின் பக்திக்குக் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் அரசு மேற்கொண்டுள்ள செலவுகள் குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், 'தர்மம் வென்றுள்ளது. 1923 முதல் பல்வேறு காலகட்டங்களில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 2026-ஆம் ஆண்டிலும் அதே தீர்ப்பு வந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கோயில்களைப் பாதுகாக்க வேண்டிய நிலையில், தீபம் ஏற்றக் கூடாது என நீதிமன்றம் வரை செல்வது வேதனையளிக்கிறது' என்றார்.
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், 'மக்கள் உண்டியல் காணிக்கை மூலம் திரட்டப்பட்ட பணத்தை, கோயில் வழிபாட்டு உரிமைகளைத் தடுக்கும் வழக்கிற்காக அரசு செலவிடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 லட்சம் வரை வழக்கறிஞர் கட்டணம் செலுத்தப்படுவதாகத் தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக அரசு செய்த மொத்த செலவு குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்று கோரினார்.
மேலும், 'திருவண்ணாமலையைப் போலவே திருப்பரங்குன்றத்திலும் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயத்தில் அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இந்தத் தீர்ப்பை அரசு முறையாக அமல்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்; இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று அவர் எச்சரித்தார். இதனிடையே, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.









