நாகப்பட்டினத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு வினோதமாக உள்ளதாகவும், இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மதக் கலவரங்களை ஏற்படுத்த திட்டமிட்டு முயன்று வருவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள்விக்னேஷ் விவகாரம் குறித்து பேசிய அவர், அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார். "மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுப்பேன்" என்று கூறுவது முறையல்ல எனக் குறிப்பிட்ட அவர், உடனடியாக எம்எல்ஏ அருள்விக்னேஷை கைது செய்து அவரது பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீரின்றி கருகி வரும் சம்பா பயிர்களை அரசு உடனடியாக நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றார். மேலும், இப்பகுதிகளை வறட்சிப் பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.









