திருப்பத்தூர் அருகே ஏரியூர் பகுதியில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு அப்பகுதியின் வரலாறு மற்றும் அக்கால வணிகத் தொடர்புகள் குறித்த முக்கிய தகவல்களை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஏரியூர் மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் இந்தப் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.
இந்திய தொல்லியல் துறை அலுவலர் முத்துக்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா தலைமையிலான ஆய்வுக் குழுவினர் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கல்வெட்டு அடையாளம் காணப்பட்டது.
“ஸ்வஸ்தி ஸ்ரீ” என்ற மங்களச் சொல்லுடன் கல்வெட்டு தொடங்குகிறது. அதில், தெலுங்கு கம்பனனின் அலுவலரான முனையத் தரையர், நல்லூர் குளத்துக்குச் செல்லும் வாய்க்காலுக்கு “ஆயிரத்தைந்நூற்றுவன்” என்ற பெயரை சூட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வெட்டில் இடம்பெற்றுள்ள “ஆயிரத்தைந்நூற்றுவன்” என்ற பெயர், இடைக்காலத்தில் செயல்பட்டதாகக் கூறப்படும் “திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்” என்ற புகழ்பெற்ற வணிகக் குழுவை நினைவுபடுத்துவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 700 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு, ஏரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வரலாற்றுப் பின்னணி, நீர்ப்பாசன அமைப்பு மற்றும் அக்கால வணிகத் தொடர்புகள் குறித்து அறிந்து கொள்வதற்கான முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.









