அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டு பாதை தொடர்பான இடப்பிரச்சினையில் ராஜா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலைக்கு காரணமான அனைவரையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாவுக்கும் அவரது உறவினரான சுப்பிரமணியனுக்கும் இடையே வீட்டு பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு ராஜா வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அரியலூர் போலீசார் சுப்பிரமணியன், அவரது தந்தை கண்ணன், தாயார் கார்த்திகா மற்றும் அவரது மகள் காவியா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கொலைக்கு காரணமானவர்கள் அனைவரையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்றும், ராஜாவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாளை வழங்கியதாக கூறப்படும் தேவேந்திரன் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் இரண்டு நுழைவு வாயில்களிலும் திரண்டதால், ஆட்சியர் அலுவலகத்தின் இரு நுழைவு வாயில் கதவுகளும் மூடப்பட்டன.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் சிரமம் ஏற்பட்டது. சிலர் சுவர் ஏறி குதித்து வெளியே சென்றனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சம்பவத்தால் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது. சாலை மறியல் காரணமாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.









