உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் மற்றும் அதன் உப கோவில்கள் சார்பில், கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்து சுப்பிரமணிய சாமிகள் ஒன்றிணைந்து சூரசம்ஹார விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவாரூர் நகரில் கந்த சஷ்டி விழாவின் போது சூரசம்ஹார உற்சவம் மிக விமரிசையாக நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு காரணங்களால் கடந்த சில தசாப்தங்களாக நின்றுபோன இந்தத் பாரம்பரிய நிகழ்வு, இந்த ஆண்டு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, தியாகராஜர் கோவில், கமலாலயம் மேல்கரை யக்னேஸ்வரர் கோவில், வடக்கு வீதி பாலசுப்பிரமணிய சாமி கோவில், கீழ வீதி பழனியாண்டவர் கோவில் ஆகிய நான்கு கோவில்களில் இருந்தும் சுப்பிரமணிய சாமிகள் முறையே புறப்பட்டனர். பின்னர் கீழ வீதி தேரடியில் ஒன்றிணைந்து, அங்கிருந்து புறப்பட்டு தெற்கு வீதி மற்றும் கீழவீதி சந்திப்பில் உள்ள குமரன் கோவில் தெரு குமர கோட்டத்திலிருந்து எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமியுடன் இணைந்தனர்.
ஐந்து சுப்பிரமணிய சாமிகளும் தெற்கு வீதி மையப் பகுதி ராஜன் கட்டளை மண்டபத்திற்கு எதிரே எழுந்தருளிய நிலையில், சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது முருகப்பெருமான் சூரனை வேலால் வதம் செய்யும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண திருவாரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து கோவில்களின் சாமிகள் ஒன்றிணைந்து நடைபெற்ற இந்த விழாவை பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.
விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் நகர் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையில் காவல்துறையினர் மேற்கொண்டு, போக்குவரத்துச் சீரமைப்புப் பணிகளிலும் ஈடுபட்டனர்.









