தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் 'அகல் விளக்கு' மற்றும் 'பீனிக்ஸ்' பதிப்பகங்களின் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் இந்த பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவற்றில் உள்ள வரலாற்றுத் தகவல்கள் நம்பகத்தன்மையற்றவை என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் எழுத்தாளர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன. மேலும், சந்தை விலையை விட அதிக விலைக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நூலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் அரசினர் தோட்டம் அருகே உள்ள மாவட்ட நூலகத்தில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன்ராஜன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட நூலக அதிகாரி கணேசனிடம் விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா மற்றும் கொள்முதலில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து ஆவணங்களைச் சரிபார்த்து வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.









