நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள தேரிக்காட்டுப் பகுதியில், விவசாயம் செய்வதாகக் கூறி நிலங்களை வாங்கிய கேரளாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று, சட்டவிரோதமாக கனிம வளங்களைச் சுரண்டி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடலிவிளை பகுதியில், விவசாய நிலங்களை விலைக்கு வாங்கிய அந்த கும்பல், விவசாயத்திற்குப் பதிலாக ராட்சத இயந்திரங்களைப் பயன்படுத்தி சுமார் 100 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி செம்மண் உள்ளிட்ட கனிம வளங்களை நவீன முறையில் கொள்ளையடித்து வருகிறது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக வளர்ந்திருந்த பனை மரங்கள் எவ்வித அனுமதியுமின்றி வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன.
வாழ்வாதாரம் பாதிப்பு:
இந்த முறையற்ற மண் அகழ்வால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து வடலிவிளை மக்கள் கூறுகையில், 'விவசாயம் செய்வதாகக் கூறி நிலத்தை வாங்கியவர்கள், ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மண்ணைத் தோண்டி செங்கல் தயாரித்து கேரளாவுக்குக் கடத்துகின்றனர். எங்களின் வாழ்வாதாரமான பனைத் தொழிலையும், விவசாயத்தையும் இந்தச் செயல் முற்றிலுமாக அழித்து வருகிறது' எனத் தெரிவித்தனர்.
அதிகாரிகள் மௌனம்:
சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தக் கோரி தாசில்தாரிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, நெல்லை மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு, சட்டவிரோத குவாரிகளை மூடி சீல் வைப்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









