திருவண்ணாமலையில் உலக புகழ்பெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக, இரண்டாவது நாளான இன்று தெப்பல் உற்சவம் விமரிசையாகத் தொடங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 24ஆம் தேதி மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.மகா தீபத் திருவிழாவைத் தொடர்ந்து, தற்போது தெப்பல் உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, இன்று காலையில் அண்ணாமலையார் கிரிவலம் சென்றார். அதனைத் தொடர்ந்து, இரவு 9 மணியளவில் திருவண்ணாமலை ஐயங்குளத் தெருவில் அமைந்துள்ள ஐயங்குளத்தில் ஸ்ரீ பராசக்தியம்மன் தெப்பலில் எழுந்தருளினார்.
அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர், பராசக்தியம்மன் தெப்பத்தில் அமர்ந்து ஐயங்குளத்தில் மும்முறை பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ச்சியாக, இன்று இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.









