ஈரோடு லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய வகுப்பறை கட்டிடங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜய் பாலாஜி கூறியதாவது:
'விலையில்லா வேட்டி-சேலை திட்டப் பணிகள் திட்டமிட்டபடி டிசம்பர் இறுதிக்குள் முழுமையாக முடிக்கப்படும். எதிர்வரும் பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உயர்தரமான வேட்டி மற்றும் சேலைகள் விநியோகிக்கப்படும். பொங்கலுக்கு வழங்கப்படும் இந்த விலையில்லா வேட்டிகள் மிகத் தரமானதாக தயாரிக்கப்படும். அவைகளை நாங்களே சட்டமன்றத்தில் அணிந்து கொண்டு வருவோம்' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், விராலிமலை தொகுதியில் இடைத்தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்த கேள்விக்கு, கடந்த காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற உதவிகளை வழங்கி வருவது வழக்கம் என்பதால், இதனை பெரிதுபடுத்த தேவையில்லை என்றார்.
மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள வாடகை உயர்த்தப்பட்ட கட்டிடங்கள் குறித்த கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்து வாடகையைக் குறைக்க முடிவு செய்யப்படும் என்றும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பாதியில் விடப்பட்ட திட்டப்பணிகளை விரைந்து முடிக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.









