திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செங்கிலிகுப்பம் தேசிய நெடுஞ்சாலையில், பள்ளிப் பேருந்தும் தனியார் காலணி தொழிற்சாலை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வழக்கம்போல் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிப் பேருந்து ஒன்று செங்கிலிகுப்பம் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், எதிரே தனியார் காலணி தயாரிப்பு தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றிவந்த பேருந்தும் வந்துள்ளது. செங்கிலிகுப்பம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த தொழிற்சாலை பேருந்து, பள்ளிப் பேருந்தின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினரும், சக வாகன ஓட்டிகளும் உடனடியாக மீட்பப் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தின் காரணமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான இரண்டு பேருந்துகளும் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமா அல்லது வாகனக் கோளாறு காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









