திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே அவர்களின் உத்தரவின்பேரில், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் தீவிரமாக நடத்தப்பட்டன.
ஆம்பூர் பச்சக்குப்பம், எம்.சி. சாலை, வெங்கலி, ஆம்பூர் ரயில் நிலையம், வெங்கடசமுத்திரம், பெருமாள் கோவில் பகுதி, தேவலாபுரம் மற்றும் துத்திப்பட்டு உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடைபெற்ற இந்த முகாம்களில், பொதுமக்கள், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் வழங்கிய முக்கிய ஆலோசனைகள்:
- பெண்கள் பாதுகாப்பு: பொது இடங்களில் அச்சமின்றி நடமாடுவது மற்றும் தற்காப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- அவசர உதவி எண்கள்: ஆபத்துக் காலங்களில் 112, பெண்கள் உதவி மையம் 181, குழந்தைகள் உதவி எண் 1098 மற்றும் காவலன் 'SOS' செயலியைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
- சைபர் கிரைம் தடுப்பு: சமூக வலைதளப் பயன்பாடு, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மோசடிகள் மற்றும் முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
பெண்களுக்கு ஏற்படும் எந்தவித அச்சுறுத்தல்களையும் தயங்காமல் காவல் துறையிடம் புகாரளிக்கலாம் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை உறுதியுடன் செயல்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.









