கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் பெருமளவிலான ஊழல் நடைபெற்றிருப்பதாக புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள்முருகன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எழுத்தாளர் பெருமாள்முருகன் கூறியதாவது: கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைப் பார்வையிட்டபோது, அதில் மாபெரும் முறைகேடு நடந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. அகல் விளக்கு என்ற ஒரே பதிப்பகத்தைச் சேர்ந்த சுமார் 2,000 புத்தகங்கள் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இயங்கி வரும் சூழலில், குறிப்பாக ஒரே பதிப்பகத்தின் 2,000 நூல்கள் அலமாரிகளில் இடம்பெற்றுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தமிழ்ச் சூழலில் நூறு பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தின் விலை ரூ.150 முதல் ரூ.200 வரை இருக்கும். ஆனால், இக்கோவையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள புத்தகங்களின் விலை வழக்கத்தை விட ஐந்தடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் சுமார் 1,500 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது போல் காட்டப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான நூல்களின் விலை ரூ.1,000-க்குக் குறைவாக இல்லை.
இந்தப் புத்தகங்களின் தரத்தை ஆய்வு செய்தபோது, அவை ஏ.ஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி மற்றும் மோசடியான நூல்கள் என்பது தெரியவருகிறது. அந்த நூல்களில் உள்ள தகவல்களின் மொழிநடை தமிழாக இல்லை; மேலும், அவற்றின் ஆசிரியர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் இதுவரை எந்த நூலையும் எழுதியதாகத் தகவலில்லை. இதனால் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.
நூலகத்தில் பல புத்தகக் கட்டுகள் இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளன. அவையும் முழுமையாகச் பரிசோதிக்கப்பட்டால், இந்த ஊழலின் மதிப்பு கோடிகளைத் தாண்டும். எனவே, இந்த நூல்களுக்கு ஆர்டர் வழங்கியவர்கள், விநியோகம் செய்தவர்கள் மற்றும் தொடர்புடைய பதிப்பகத்தின் உரிமையாளர்கள் யார் என்பதைக் கண்டறிந்து தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருமாள்முருகன் கோரிக்கை விடுத்தார்.









