வீரவநல்லூர்: வீரவநல்லூர் அருகே உள்ள பஜார் பகுதியில் ஓட்டலை சூறையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வீரவநல்லூர் அடுத்த அத்தாளநல்லூர் பகுதிக்குட்பட்ட கொட்டாரக்குறிச்சியைச் சேர்ந்தவர் மகாராஜன் (வயது 40). இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 3-ஆம் தேதி மகாராஜன் தனது கூட்டாளிகளுடன் வீரவநல்லூர் பஜார் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றிற்குச் சென்று சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த பின்னர் அதற்கான தொகையைச் செலுத்தாமல் அவர்கள் புறப்பட்டுள்ளனர்.
இதைக் தட்டிக் கேட்டு ஓட்டல் உரிமையாளர் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த மகாராஜன், நள்ளிரவில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மீண்டும் ஓட்டலுக்கு வந்துள்ளார். அங்கு உணவுப் பொருட்களைக் கீழே தள்ளி வீசி, தளவாடப் பொருட்களைச் சேதப்படுத்தி ஓட்டலை சூறையாடியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் வீரவநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமைக் குற்றவாளியான மகாராஜனை அன்றைய தினமே கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தலைமறைவாகிப் போலீசாரால் தேடப்பட்டு வந்த கூட்டாளிகளான சாட்டுபத்து பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் என்ற ஆனந்த் (31), ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்த துர்கா நம்பி மற்றும் கொட்டாரக்குறிச்சியைச் சேர்ந்த சுபாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.









