திருவாரூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக, திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை, தெற்கு வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும், நெம்மேலி, எரவாஞ்சேரி, பூந்தோட்டம், மருதுவாஞ்சேரி, கடம்பங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அப்பகுதியில் நிலவிய கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்களும், பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், போதிய நீரின்றி பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் பெய்து வரும் இந்த திடீர் கனமழை நெல் பயிர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.









