திருவாரூர் மாவட்டத்தில் போதிய தண்ணீர் மற்றும் பருவமழை பொய்த்த காரணத்தினால், சம்பா மற்றும் தாளடி பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், குளங்களில் இருந்து பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து வந்து கருகும் பயிர்களுக்குத் தெளித்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை நம்பியும், வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்தும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டனர். எனினும், நீர் திறப்பு உரிய காலத்தில் நிறுத்தப்பட்டதாலும், வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவிற்குப் பெய்யாததாலும் வயல்வெளிகள் வறண்டு நிலங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக கோட்டூர் அருகே உள்ள இருள்நீக்கி, காரியமங்கலம், ஆலத்தூர், சபாபதிபுரம், அக்கரைக்கோட்டகம், சோழங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளன. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், ஒருசில பகுதிகளில் வாய்க்கால் மற்றும் குளத்து நீரை மோட்டார் மூலம் இறைத்தும், பாத்திரங்களில் தண்ணீர் சுமந்து சென்றும் பயிர்களைக் காப்பாற்றப் போராடி வருகின்றனர்.
ஒரு ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, 60 நாட்களைக் கடந்துள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் உடனடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டு, ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசு உடனடி உதவிகளை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.









