திருவாரூர் மாவட்டத்தில் தொலைதூர கிராமப்புறங்களில் உள்ள மக்களும் மின்னணு நீதிமன்ற சேவைகளைப் பெறும் வகையில் நடமாடும் இ-சேவை வாகனத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்துித்துத் தொடங்கி வைத்தார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் தொலைதூர கிராமப்புறங்கள், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் போதிய தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பகுதிகளில் மின்னணு நீதிமன்ற சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த நடமாடும் இ-சேவை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 23 முதல் 27 வரை மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் இந்த வாகனம் மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்கள் மற்றும் கிராமப்புறங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு சேவைகளை வழங்க உள்ளது.
இந்த வாகனத்தின் மூலம் நீதிமன்ற வழக்குகள் தொடர்பான இலவச கைபேசி செயலி பயன்பாடு (Mobile App), மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்தல் (e-Filing), காணொளி வாயிலாக சாட்சியம் அளித்தல் (Video Conference) உள்ளிட்ட சேவைகள் குறித்து பொதுமக்களுக்கும், வழக்காடிகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டு, அவற்றைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட உள்ளன.
இதற்கான தொடக்க விழா திருவாரூரில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இராஜலெட்சுமி நடமாடும் இ-சேவை வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி மற்றும் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், கூடுதல் மாவட்ட நீதிபதி வடிவேல், பட்டியலின சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் லதா, சார்பு நீதிபதி ராஜேஷ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான மாணிக்கம், மாவட்ட உரிமையியல் நீதிபதி முஹம்மது பாசில் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜி. லிஷி உள்ளிட்ட நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்.









