மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் சிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.
முக்கியக் கோரிக்கைகள்:
- மயிலாடுதுறை மாவட்ட அரசினர் பெரியார் தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு 10 நாள்கள் முறையில் சுழற்சி முறைப் பணி வழங்க வேண்டும்.
- செவிலியர் நிர்வாகத்தில் மருத்துவர்கள் தலையிடுவதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்.
- விடுப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக அணுகும்போது தரக்குறைவாகப் பேசும் செவிலியர் கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செவிலியர்களின் கோரிக்கைகளை நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் சங்க நிர்வாகிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளை மாவட்ட நலப்பணிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகங்கள் கைவிட வேண்டும்.
- செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து மருத்துவமனை மற்றும் மாவட்ட நலப்பணிகள் நிர்வாகம், சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்ட அரசினர் பெரியார் தலைமை மருத்துவமனையில் மொத்தம் 104 செவிலியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்தப் போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.









