நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல் சலாம். எலெக்ட்ரீசியனாகப் பணிபுரிந்து வரும் இவரது மகன் ரஹீம் (15), அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ரஹீமின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 17-ஆம் தேதி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரஹீம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் மாணவனின் வலது கால் முட்டியில் ஜவ்வு விலகியிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து வலது காலில் மாவுக்கட்டு போட்ட மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
அதன்படி, அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் ரஹீமை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். அறுவை சிகிச்சை முடிந்து ரஹீம் வெளியே அழைத்து வரப்பட்டபோது, பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். காயமடைந்த வலது காலுக்குப் பதிலாக, எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் நல்ல நிலையில் இருந்த இடது காலில் மருத்துவர்கள் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்திருப்பது தெரியவந்தது.
இதனால் பதற்றமடைந்த மாணவனின் பெற்றோர், சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். அதற்கு அந்த மருத்துவர், 'டென்ஷனில் மாற்றிச் செய்துவிட்டேன்' என மிகவும் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து மருத்துவமனை டீனிடம் புகார் அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை என்று பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடது காலில் போடப்பட்டிருந்த கட்டுகளை மருத்துவர்கள் அவசர அவசரமாகப் பிரித்ததால், மாணவன் ரஹீம் வலியால் கதறித் துடித்துள்ளான்.
மருத்துவர்களின் இந்த அலட்சியத்தால் தனது மகனின் இரு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர். தவறு செய்த மருத்துவர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தப் பொறுப்பற்ற செயலுக்குக் காரணமானவர்களே தங்கள் மகனைத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ள இந்த மருத்துவக் குளறுபடி நெல்லை வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.









