திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த மழையால் அப்பகுதியில் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
போளூர், வசூர், புதுப்பாளையம், குன்னத்தூர், பேட்டை, கரைப்பூண்டி மற்றும் பெரியகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இன்று மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சாரல் மழையும் மிதமான மழையும் பெய்தது.
இந்த கோடை மழையின் காரணமாக அப்பகுதியில் நிலவிய வெப்பம் தணிந்து, இதமான குளிர் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். மேலும், இந்த மழை விவசாயப் பணிகளுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.









