தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகிவரும் நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாகப் பெற்றுத் தர வலியுறுத்தியும், அனைத்து விவசாயக் கடன்களையும் நிபந்தனையின்றித் தள்ளுபடி செய்யக் கோரியும் திருவாரூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாததைக் கண்டித்தும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு சம்பா நெற்பயிருக்கு உரிய காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள், மேட்டூர் அணை திறக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் முழுமையாக வந்து சேராததால் பயிர்கள் கருகி வருவதாகத் தெரிவித்தனர். எனவே, பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.









