திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
வாணியம்பாடி நியூடவுன் கம்பவுண்டர் நாராயணசாமி தெருவில் ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் தெருவைக் கடந்து செல்லும்போது நாய்கள் துரத்துமோ அல்லது கடித்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் திடீரென நாய்கள் குறுக்கிடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது.
இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்லக்கூட முடியாத சூழல் உருவாகியுள்ளதால், இப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்பாக வாணியம்பாடி நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.









