திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து, மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் நோக்கில் மாபெரும் கல்விக்கடன் முகாமை இன்று மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன், தகுதியான மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடனுக்கான ஆணைகளை நேரில் வழங்கினார். பொருளாதாரத் தடையின்றி அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்வதே இம்முகாமின் முதன்மை நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த முகாமில் பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, மாணவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, உடனடி கடனுதவி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வங்கி அதிகாரிகள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.









