திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் அமைந்துள்ள எல்.சி.81 (LC-81) ரயில்வே கேட், சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை அப்பகுதி மக்களின் போக்குவரத்துத் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாமல் தொடர்கதையாக நீடிக்கிறது.
வாணியம்பாடி நகரின் மையப்பகுதியில் அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையங்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதேபோல், நியூடவுன் பகுதியில் கல்லூரிகள், டி.எஸ்.பி. அலுவலகம் மற்றும் ஐ.டி.ஐ. உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால், இரு பகுதிகளுக்கும் இடையே தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ரயில்கள் கடந்து செல்வதற்காக அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அவசர சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தேர்தல் காலங்களில் மேம்பாலம் அமைக்கப்படும் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதும், வெற்றி பெற்ற பிறகு அதனை கிடப்பில் போடுவதும் வாடிக்கையாகிவிட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஆறு மாத காலத்திற்குள் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும், இதுவரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, சம்பந்தப்பட்ட அரசுத் துறையினர் உடனடியாக மேம்பாலமோ அல்லது தரைப்பாலமோ அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.









