குளித்தலை அடுத்த தோகைமலையில் அதிமுக மேற்கு ஒன்றியத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நடைபெற்ற இந்த திறப்பு விழாவிற்கு தோகைமலை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் புதிய கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: "நமது அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் இம்மாத இறுதியில் கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள ஆட்சி எப்போது கவிழும் என்ற சூழல் நிலவுகிறது; தற்போதைய அரசியல் நிலவரங்கள் அனைத்தும் அதிமுகவிற்கு சாதகமாகவே உள்ளன. வரும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று, எடப்பாடியார் மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி," என்றார்.
இந்த அலுவலகத் திறப்பு விழாவில் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.









