திருச்சி: நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி ஒவ்வொரு நாளும் சீரழித்து வருவதாக முன்னாள் எம்பியும், மண்டல மறுசீரமைப்பு தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள முன்னாள் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்த நாள் விழா மற்றும் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பீட்டர் அல்போன்ஸ் நேருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் அல்போன்ஸ்:
"நவ இந்தியாவைக் கட்டமைத்து, வறுமை மற்றும் கல்வியறிவின்மையால் உழன்ற தேசத்தில் சாதி, மத, இனம், மொழி மற்றும் பாலின பாகுபாடின்றி அனைத்துக் குடிமக்களுக்கும் வாக்குரிமை என்ற மாபெரும் ஜனநாயக ஆயுதத்தை வழங்கி இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக உயர்த்தியவர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு. நாட்டின் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், சுதந்திரமான பத்திரிகைகள் மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற ஜனநாயக நிறுவனங்களை மோடி-அமித்ஷா கூட்டணி ஒவ்வொரு நாளும் சீரழித்து வருகிறது. ஏழை எளிய மக்களின் வாக்குகளைப் பாதுகாக்கவும், நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காக்கவும் நேரு பிறந்த இந்த நல்ல நாளில் காங்கிரஸ் கட்சி உறுதி ஏற்கிறது" என்றார்.
தொடர்ந்து மேகதாது அணை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பிரதமர் கலந்துகொண்ட மேடையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசியதை, பிரதமர் கண்டிக்காததுடன், பேச அனுமதித்திருப்பது தமிழக நலனுக்கு விரோதமானது. அவரைப் பேச அனுமதித்திருக்கக் கூடாது. அப்படிச் சொல்லாததன் மூலமாக பிரதமர் மறைமுகமாக தமிழகத்தின் நலனுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்பதுதான் பொருள். இப்படிப்பட்ட பிரதமர் நமக்குத் தேவையா என்ற கேள்வி எழுகிறது" எனத் தெரிவித்தார்.
எம்எல்ஏக்கள் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். யாராக இருந்தாலும் அதற்கான பூர்வாங்க விசாரணைகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருவதாக அறிகிறோம். ஆகவே நிச்சயமாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதுதான் ஒழுக்கம், அதுதான் நீதி" என்றார்.
சட்டம் ஒழுங்கு குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுவிட்டதைப் போலவும், இதுவரை தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள் நடக்காதது போலவும், விஜய் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் இவை அனைத்தும் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்க நினைக்கின்றனர். கொலைகள் தடுக்கப்பட வேண்டும்; சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைத் திறமையாகக் கையாள வேண்டும்; சமூக விரோதிகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் குற்றங்கள் குறைந்துள்ளன. கால் நூற்றாண்டு காலமாக வளர்ந்த பிரச்சினைகளைச் சில மாதங்களில் முழுமையாக மாற்றியமைக்கக் கால அவகாசம் தேவைப்படும்" என்றார்.
மேலும், நூலகங்களுக்குள் போலி நூல்கள் நுழைந்தது குறித்த விவகாரத்தில், நூலகத் தேர்வு குழுத் தலைவராக இருந்த பேராசிரியர் ஜெயஞ்சன் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், "தற்போது ஊழலற்ற அரசாங்கத்தை முதல்வர் விஜய் உருவாக்கியுள்ளார். கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட கோப்புகள் தற்போது தகுதியின் அடிப்படையில் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்த கேள்விக்கு, "தொகுதி மறுவரையறை விவகாரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, நடந்து வரும் சதியின் அத்தனை முகத்திரைகளும் கிழிக்கப்படும்" என்றார்.









