நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முத்துகாப்பட்டி அருகிலுள்ள மேதரமா தேவியில் அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டியம்மன் கோவில் திருப்பணிகளின் முதற்கட்டப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
ஸ்டேன் வென்சர்ஸ் மற்றும் சைத்ரா அறக்கட்டளையின் தலைவர் ஆர். பிரதீப்குமார், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, மேதரமா தேவியில் அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டியம்மன் கோவில் கட்டுமானப் பணிகளுக்காக நிலம் வாங்கும் முதற்கட்டப் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில், ஸ்டேன் வென்சர்ஸ் குழுமத்தின் சார்பில் ரூ.11 லட்சத்திற்கான நிதியுதவிக் காசோலையை அறக்கட்டளையின் தலைவர் பிரதீப் குமார், ஸ்ரீ பெரியகாண்டியம்மன் கோவில் நிர்வாகக் குழுவிடம் வழங்கினார். மேலும், கோவில் கட்டுமானத்திற்கான திருப்பணியைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.
தொடர்ந்து மேதரமாதேவி பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதீப் குமார், "அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டியம்மன் கோவில் கட்டும் பணிக்கு அம்மன் அனுமதி வழங்கியுள்ளார். நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த இந்த கோவில் திருப்பணி விரைவில் நிறைவேறும். ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் எனக்கு இந்த கோவில் கட்ட அனுமதி அளித்தது மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த ஆலயம் மேதரமாதேவி பொதுமக்களின் விருப்பப்படியே பிரமாண்டமாக உருவாக்கப்படும். இது அம்மா போட்ட ஆணை, அதைக் நிறைவேற்றுவது எனது கடமை" எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் நிறுவனத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் அசோக், கவின் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிறைவாக, ஸ்ரீ பெரியகாண்டியம்மன் கோவில் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார், ஸ்டேன் வென்சர்ஸ் மற்றும் சைத்ரா நிறுவன தலைவர் பிரதீப்குமாருக்கு கோவில் நிர்வாகக் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.









