பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் ஏழாம் நாளான இன்று, மகா ரத தேரோட்டம் மிகவும் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மர தேரில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இந்தத் தேரோட்டத்தின் முக்கிய அம்சமாக, குழந்தை வரம் வேண்டி அண்ணாமலையாரை வழிபடும் தம்பதியினர், வேண்டுதல் நிறைவேறியதும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். அதன்படி, கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தையைப் படுக்க வைத்து, அண்ணாமலையார் ஆலயம் முன்பாக சிறப்பு வழிபாடு நடத்தி, நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.









