பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வாக மகா ரத தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
நான்கு மாட வீதிகளில் வலம் வந்த பஞ்சமூர்த்திகள்
மகா ரத தேரோட்டத்தையொட்டி விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் திருத்தேர்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன்
மகா ரத தேரோட்டத்தின்போது திருமணமான தம்பதியினர் குழந்தை வரம் வேண்டி அண்ணாமலையாரிடம் பிரார்த்தனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பு வாய்ந்த வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி, குழந்தை பிறந்த பின்னர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், கரும்புகளால் தொட்டில் அமைத்து அதில் குழந்தையைப் படுக்க வைத்து கோவில் முன்பாக வழிபாடு நடத்துகின்றனர். தொடர்ந்து, அந்தத் தொட்டிலைச் சுமந்தபடி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
அந்த வகையில், இன்று நடைபெற்ற மகா ரத தேரோட்டத்தின்போது ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் கரும்புத் தொட்டில்களில் குழந்தைகளைப் படுக்க வைத்து நான்கு மாட வீதிகளில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்வு பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.









