நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'தபசு காட்சி' வைபவம் இன்று (நவம்பர் 5) மிகுந்த பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது.
கடந்த அக்டோபர் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழாவின் 11-வது நாளான இன்று, சுவாமி நெல்லையப்பர் அன்னை காந்திமதி அம்பாளுக்குக் காட்சி கொடுக்கும் தபசு வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக, நேற்று இரவு காந்திமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு, கம்பை நதிக்கரையில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலை வந்தடைந்தார். அங்கு அம்பாள் வெண்பட்டு உடுத்தி, விபூதி அலங்காரத்தில் தவக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பர், கம்பை நதியில் விஸ்வேஸ்வர லிங்கமாகவும், நீராகவும் காட்சி அளித்தார். பின்னர், காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பரை அன்னை காந்திமதி அம்பாள் வலம் வந்து, மாலை மாற்றும் வைபவம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கோயில் வந்தடைந்த சுவாமி - அம்பாளுக்கு, நாளை அதிகாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் திருவிழா நடைபெற உள்ளது.









