மயிலாடுதுறை மாவட்டம், உளுத்துக்குப்பை கிராமத்தில் உள்ள நெல் வயலில், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் களப்பயிற்சியின் ஒரு பகுதியாக நடவு நடும் பணியில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை தாலுகாவில் உள்ள தஞ்சாவூர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் 13 பேர் கடந்த ஒரு வாரமாக கிராமப்புற களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, உளுத்துக்குப்பை கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி அருணஜடேசனின் வயலில் மாணவிகள் இன்று நடவுப் பணியில் ஈடுபட்டனர்.
தொடக்கத்தில் நெல் வயலில் சேற்றில் இறங்குவதற்குச் சிரமப்பட்ட மாணவிகள், சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டு கைதேர்ந்த விவசாயத் தொழிலாளர்களைப் போலச் சுறுசுறுப்பாக நாற்று நடும் பணியைச் செய்தனர். மேலும், நடவுப் பணியின்போது சோர்வை நீக்கும் வகையில், 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு" பாடலை கோரஸாகப் பாடித் தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டனர்.









