அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருமானூர் வட்டாரத்தில் நடைபெறும் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.
முதலில் சாத்தமங்கலம் கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள வயலைப் பார்வையிட்ட அவர், சாகுபடி முறைகள், பயிர்களின் வளர்ச்சி நிலை, உரமிடுதல் மற்றும் நீர்ப்பாசன வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், உரங்களை முறையாகப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகளையும் அலுவலர்களையும் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, திருமானூர் ஊராட்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெறும் நிலவுடமை பதிவேற்ற முகாமினைப் பார்வையிட்ட ஆட்சித்தலைவர், ஆவணங்கள் சரிபார்க்கும் முறை மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். நிலவுடமை விவரங்களை எவ்வித விடுதலுமின்றி துல்லியமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
பின்னர் திருமானூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், விதைகள் மற்றும் உரங்களின் இருப்பு விவரங்களைக் கேட்டறிந்து, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார். தொடர்ந்து நெல் விதைப்பண்ணை வயலையும் பார்வையிட்டு உரிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.









