விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயக் கல்லூரி மாணவர்களுக்கு நவீன முறையில் நாற்று நடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு விவசாயப் பணிகளில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் விவசாயக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, இறுதி ஆண்டின்போது விவசாயம் தொடர்பான செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் மாணவர்களுக்கான நாற்று நடும் பயிற்சி இன்று நடைபெற்றது.
பயிற்சியின் தொடக்கமாக, நாற்று நடுவதற்கு முன்பு கடைபிடிக்கப்படும் வழக்கமான நடைமுறைகளைக் கற்றுக்கொண்ட மாணவர்கள், தொடர்ந்து விவசாயப் பணிகளில் களமிறங்கினர். விளைந்த நாற்றுகளைக் குழுக்களாகப் பிரித்தெடுத்த அவர்கள், நாற்று நடும் பெண்களுடன் இணைந்து வரிசை முறையில் நாற்றுகளை நட்டனர். மாணவர்களின் இந்த தீவிர ஈடுபாடு அப்பகுதி விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றது.
இதுகுறித்து நான்காம் ஆண்டு மாணவர் சாய் கூறுகையில், "எங்களுக்குத் தற்போது செய்முறைப் பயிற்சிகள் நடைபெற்று வருவதால், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறு வகையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது நாற்று நடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். வரிசையாக நடப்படும் நாற்றுகள் மூலம் அதிக மகசூல் கிடைப்பதால், நவீன முறை விவசாயத்தின் நுணுக்கங்களை நேரடியாக அறிந்து கொள்ள முடிகிறது" என்று தெரிவித்தார்.









