கரூர் மாவட்டத்தில் கண்வலிக் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, மாவட்டத்தில் மொத்தம் 480.4 ஹெக்டேர் பரப்பளவில் இப்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருவது குறித்தும், அதற்கான மானியத் திட்டங்கள் குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புஞ்சை காளகுறிச்சியில் விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டம் அமைத்து கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசன்னா ராமசாமி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்விற்குப் பின்னர் அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குறைந்த நீரில் அதிகளவு பயிர் சாகுபடி செய்யும் வகையில், விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத் திட்டம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீர் மேலாண்மை மேம்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
கண்வலிக் கிழங்கு ஒரு முக்கியமான மருத்துவப் பயிராகும். இதன் கிழங்குகள் மற்றும் விதைகள் மருத்துவ மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த பரப்பளவில் சாகுபடி செய்து விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட இது வழிவகுக்கிறது. கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, அரவக்குறிச்சி வட்டாரத்தில் 455.55 ஹெக்டேர் பரப்பளவிலும், க.பரமத்தி வட்டாரத்தில் 28.7 ஹெக்டேர் பரப்பளவிலும், கரூர் வட்டாரத்தில் 0.6 ஹெக்டேர் பரப்பளவிலும், தாந்தோனி வட்டாரத்தில் 1.4 ஹெக்டேர் பரப்பளவிலும் என மொத்தம் 480.4 ஹெக்டேர் பரப்பளவில் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
வெளிச்சந்தைகளில் இதன் விதைகள் ஒரு கிலோ ரூ.9,500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். இருப்பினும், கண்வலிக் கிழங்கு மருத்துவப் பயிராக இருந்தாலும், இதன் அனைத்து பாகங்களிலும் நச்சுத்தன்மை கொண்ட சேர்மங்கள் உள்ளதால் இதனை உணவாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், விவசாயிகள் இதைப் கையாளும்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் தியாகராஜன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.









