திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் இன்றி சுமார் 3,000 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் சுமார் 1,50,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேட்டூர் அணை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி திறக்கப்பட்ட போதிலும், ஆறுகளில் குறைந்த அளவே தண்ணீர் வந்ததால் வாய்க்கால்களுக்கு நீர்வரத்து இல்லை. இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த மழையை நம்பி விவசாயிகள் பயிர்களைப் பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்யாதது மற்றும் மேட்டூர் அணை மூடப்பட்டதால் ஆறுகளில் நீர்வரத்து முற்றிலுமாக நின்றுள்ளது. குறிப்பாக, முடிகொண்டான் ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால், நிம்மேலி, ஆலங்குடி, தென்குடி, மருதவஞ்சேரி, குப்பம், சோத்திரியம் உள்ளிட்ட கிராமங்களில் விதைக்கப்பட்டு 20 நாட்களான சம்பா பயிர்கள் நீரின்றி கருகி வருகின்றன. இதனால் விவசாய நிலங்கள் பாலம் பாலமாக வெடித்துக் காணப்படுகின்றன.
ஒரு ஏக்கருக்கு 10,000 ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளதாகவும், தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வருவதால் என்ன செய்வதென்று அறியாமல் தவிப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குருவை சாகுபடி ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சம்பா சாகுவடியும் கேள்விக்குறியாகியுள்ளதால், காவிரி நீரைப் பெற்றுத்தர தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









