திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள புத்தகரம் பகுதியில் சம்பா சாகுபடிப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவத்திற்காக விவசாயிகள் நேரடி விதைப்பு மற்றும் நெல் நடவுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், உள்ளூர் விவசாயத் தொழிலாளர்களின் கடும் பற்றாக்குறை காரணமாக, விவசாயிகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். போதிய ஆட்கள் கிடைக்காத சூழலில், வேறு வழியின்றி வடமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டு நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாற்று பறித்தல் முதல் வயல்களில் நடவு செய்வது வரை அனைத்துப் பணிகளையும் தற்போது வடமாநிலத் தொழிலாளர்களே முன்னின்று செய்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், உள்ளூர் தொழிலாளர்களின் பற்றாக்குறை மற்றும் விவசாயப் பணிகளுக்கான கூலி உயர்வு ஆகியவை சாகுபடிச் செலவை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். சம்பா சாகுபடிப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில், தொழிலாளர் பற்றாக்குறை டெல்டா விவசாயிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.









