நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கரும்புப் பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர்.
சோழசிராமணி, ஜேடர்பாளையம், கொளக்காட்டுபுதூர், பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், பரமத்திவேலூர், நஞ்சை இடையாறு, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளையும் கரும்புகள் மூலம் வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விவசாயிகள் அதிகளவில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது கரும்புப் பயிர்களில் 'கோக்கோகோயின்' எனப்படும் மாவுப்பூச்சித் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் கரும்பு விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட இதுவரை ரூ.60,000 வரை செலவு செய்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாலசுப்பிரமணியம் கூறுகையில், நோய் தாக்கம் காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
மேலும், வேளாண்துறையும் கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையமும் இணைந்து, மாவுப்பூச்சித் தாக்குதலை எதிர்கொள்ளும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கரும்பு கரணைகளை (விதை கரும்பு) கண்டறிந்து தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









