நாமக்கல்லில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய செங்கல் சூளைத் தொழிலாளர்கள் சென்ற கார் வேப்பமரத்தில் மோதிய விபத்தில், திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சை மாவட்டம், மகாராஜபுரத்தில் உள்ள செங்கல் சூளையில் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் பணியாற்றி வருகிறார். இவரது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) நடைபெற்ற காதணி விழாவில் கலந்துகொள்வதற்காக, அதே சூளையில் பணியாற்றும் சக தொழிலாளர்கள் 10 பேர் ஒரு ஈகோ காரில் நாமக்கல்லுக்குச் சென்றனர். விழாவை முடித்துவிட்டு அன்று மாலை அனைவரும் திருச்சி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.
திருச்சி மாவட்டம், ஜம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோதூர்பட்டி அருகே கார் வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வேப்பமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும், சிகிச்சையின் பலனின்றி அடுத்தடுத்து மேலும் சிலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமலிங்கம் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 23) உயிரிழந்த நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ராமரும் இன்று (நவம்பர் 27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம், விபத்தில் காரில் பயணித்த 10 தொழிலாளர்களும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.









