மலேசியாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த திருச்சியைச் சேர்ந்த வாலிபரின் உடல், 17 நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காரைக்குளத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன் (36). இவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி அங்கு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தங்களது மகனை மீட்டுத் தருமாறு துரைமுருகனின் குடும்பத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடமும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரிடமும் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, மணப்பாறை எம்.எல்.ஏ. கதிரவன் மேற்கொண்ட தொடர் முயற்சிகளை அடுத்து, துரைமுருகன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, துரைமுருகனின் உடலை மீட்டு சொந்த ஊருக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் எம்.எல்.ஏ. ஈடுபட்டார். இதற்காகத் தனது சொந்தச் செலவில் துரைமுருகனின் மனைவி உள்ளிட்ட 3 பேரை மலேசியாவுக்கு அனுப்பி வைத்து, அங்கு இறப்பு உறுதி செய்யப்பட்ட பின் உடல் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் துரைமுருகனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, எம்.எல்.ஏ. கதிரவன் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் காரைக்குளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட உடல், உறவினர்கள் மற்றும் கிராம மக்களின் கண்ணீர் அஞ்சலிக்குப் பிறகு இன்று தகனம் செய்யப்பட்டது. மலேசியாவில் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டுத் தர மணப்பாறை எம்.எல்.ஏ. கதிரவன் மேற்கொண்ட தீவிர முயற்சிகள் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று தந்துள்ளது.









