கரூர் மாநகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா முன்பு ஜனநாயகபூர்வமான போராட்டங்களை நடத்த அனுமதி இல்லை என்று மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், நூற்றாண்டு கண்ட கரூரின் வரலாற்றுச் சின்னமான அமராவதி பழைய பாலத்தை மீண்டும் நடைப்பயிற்சிக்குப் பயன்படுத்தும் வகையில் மாநகராட்சியே ஏற்று பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஒன்றிய அரசின் 16-வது நிதிக்குழு பரிந்துரையின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.20,054 கோடியையும், மாநில அரசின் உள்ளாட்சிகளுக்கான நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.
கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரச் செயலாளர் எம். தண்டபாணி தலைமை வகித்தார். கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.பி. ஜீவானந்தம், ஆர். ஹோச்சுமின், எம். சுப்பிரமணியன், சிவா, வாலிபர் சங்க மாநகர செயலாளர் ராஜேந்திர பிரசாத், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ரஞ்சிதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.









