விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். சிறுமி மாயமாகி 43 நாட்களாகியும் இதுவரை எந்தவிதத் துப்பும் கிடைக்காத நிலையில், கர்நாடகாவில் பணிபுரிந்து வரும் ரேணு என்ற இளைஞரிடம் போலீசார் மூன்றாவது முறையாக விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆலம்பூண்டி பகுதியில் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை நேரத்தில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். குடும்பத்தினரின் தீவிர தேடுதலுக்குப் பிறகும் சிறுமி கிடைக்காததைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் முடங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், சிறுமியின் எதிர் வீட்டில் வசிக்கும் மஞ்சுளாவின் உறவினரான ரேணுவிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வேலை பார்த்து வந்த அவரை விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து, சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, தனது மகள் காணாமல் போய் இத்தனை நாட்களாகியும் அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்ற விவரம் தெரியாமல் பசியும் பட்டினியுமாகக் காத்திருப்பதாகச் சிறுமியின் தாய் பவானி கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். 'என் மகளை யாராவது கடத்திச் சென்றிருந்தால், இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து அவளை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். நேரில் கொடுக்கத் தயங்கினால், ஏதாவது ஒரு கோவிலில் கொண்டு வந்து விட்டுச் செல்லுங்கள்; கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடையாளம் கண்டு எங்களிடம் சேர்ப்பிப்பார்கள்' என்று அவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.









