.சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். வழக்கம் போல் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே பெண் ஒருவர் திடீரென தான் மறைத்து எடுத்துவந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதனைக் கவனித்த ஆட்சியர் அலுவலக பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தி, பாதுகாப்பாக மீட்டு விசாரணை நடத்தினர்.
இந்த முதற்கட்ட விசாரணையில், தீக்குளிக்க முயன்ற பெண் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த அம்சா என்பது தெரியவந்தது. மேலும், அவரது மூத்த மகன் தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற்றுள்ளதாகவும், அந்தக் கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் வங்கி ஊழியர்கள் அவரை அவதூறாகவும் அசிங்கமாகவும் பேசியதாகவும் அம்சா கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
வங்கி ஊழியர்களின் தொடர் அவமதிப்பு மற்றும் மன உளைச்சல் காரணமாகவே தனது மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், தனது மகனின் இறப்புக்குக் காரணமான அனைத்து வங்கி ஊழியர்களையும் உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்தச் சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.









