தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்கெட்டுள்ளதாகவும், திண்டுக்கல்லில் போதைப்பொருள் மற்றும் லாட்டரி விற்பனை நடைபெறும் இடங்களை நானே சுட்டிக்காட்டுவதாகவும், காவல்துறையினர் உடனடியாகச் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் கூறியதாவது:
"கடந்த நவம்பர் 1-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வாக்காளர் சேர்க்கை குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஒன்றிய மற்றும் நகர செயலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் சேர்க்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்றார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் புழக்கம்:
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே கேள்விக்குறியாகிவிட்டதாகத் தெரிவித்த அவர், "எங்கு பார்த்தாலும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பல்வேறு குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படையான காரணமே மதுவும் போதைப்பொருட்களும்தான். திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதிகளுக்குச் சென்று பார்த்தால், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் போதைப்பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றன. தாலுகா அலுவலகம் அருகில் உள்ள 'லயன் தெரு'வில்தான் கஞ்சா, போதைப்பொருள் மற்றும் லாட்டரி விற்கப்படுகின்றன. இடத்தை நானே நேரடியாகச் சொல்லிவிட்டேன்; காவல் துறை அங்கு சென்று அவர்களைப் பிடிக்கச் சொல்லுங்கள்" எனத் தெரிவித்தார்.
இடைத்தேர்தல் வியூகம்:
எதிர்வரும் இடைத்தேர்தல்களில் அதிமுகவின் வியூகம் குறித்துப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "தற்போதைய ஆளுங்கட்சிக்கு மொத்த வாக்குகளில் 35 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 65 சதவீத வாக்குகளைக் கூட்டணியின் மூலம் ஒருங்கிணைத்து, ஆளுங்கட்சியை எப்படி வீழ்த்துவது என்பதற்கான வியூகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறார். கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும். இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார்.
அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகள்:
உள்ளாட்சித் தேர்தலை 2028-ஆம் ஆண்டுக்குத் தள்ளிவைப்பதாகத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இது ஒரு செயல்படாத அரசுக்கான மிகப்பெரிய உதாரணம் என்றார். மேலும், நூலக புத்தகக் கொள்முதல் முறைகேடு, பெண்கள் இலவச பேருந்துத் திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவது குறித்தும் அவர் தனது கண்டனங்களைப் பதிவு செய்தார்.









