நெல்லை: பெரியார் படிப்பகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சரே தெரிவித்துள்ள நிலையில், இதுவரை ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அன்பு நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"பெரியார் பெயரைப் பயன்படுத்தி கடந்த கால திமுக ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் அரசியல் செய்யப்படுகிறது. தற்போது பெரியார் படிப்பகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவிக்கிறார். அவ்வாறு ஊழல் நடைபெற்றிருந்தால், இதுவரை ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இந்த ஊழலில் தமிழக அமைச்சருக்குத் தொடர்பு உள்ளதா? முதலமைச்சருக்கு இதுகுறித்து தெரியாதா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில், "அகல்விளக்கு என்ற பதிப்பகம் மூலம் புத்தகங்கள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அப்படி ஒரு அலுவலகமே இல்லை. இல்லாத அலுவலகத்தின் பெயரில் புத்தகங்கள் வெளியிடப்பட்டதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 6, 9 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நூலகத்தில் புத்தகங்கள் வைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல்களை ஆய்வு செய்ததில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. அந்தப் புத்தகங்களின் எழுத்தாளர்கள் உண்மையானவர்களா என்ற கேள்விக்கு விஜய், சுமுதா, தொழில்முறை திரிஷா விஜய் உள்ளிட்ட பெயர்கள் எழுத்தாளர்களாக இடம்பெற்றுள்ளதே சாட்சி" என்றார். பெரியார் பெயரில் ஊழல் நடைபெற்றுள்ளதா என்பதை முதலமைச்சர் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகப் பேசிய நயினார் நாகேந்திரன், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றார். கடந்த ஆட்சியில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்காததால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசும் தீபம் ஏற்ற அனுமதிக்காவிட்டால் அதன் எதிர்காலம் என்னவாகும் என்று எச்சரித்தார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேசிய அவர், "மாநிலத்தில் கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. ஏழு வயது சிறுமி மாயமாகி ஒரு மாதமாகியும் கண்டுபிடிக்கப்படவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. கடந்த ஆறு மாதங்களில் மக்களின் மனநிலை மாறியுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாத சூழல் உள்ளது. சுமார் 300 அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் நிதிநிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்று கோரினார்.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், "தூத்துக்குடி விமான நிலையம் ரூ.350 கோடி மதிப்பிலும், திருச்சி விமான நிலையம் ரூ.650 கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்திற்கு 10 வந்தே பாரத் ரயில்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் காரணமாகவே குதிரை பேரம் தொடங்கியதாகவும், அதன் தொடர்ச்சியாக இரண்டு எம்.எல்.ஏ.க்கள் இழுக்கப்பட்டதாகவும், தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். நடிகர் தனுஷை பாஜக இயக்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், "பாரதிய ஜனதா கட்சி யாருடைய பின்னாலும் செல்ல வேண்டிய அவசியமில்லை. பாஜக ஒரு சுயம்பு கட்சி; தனித்துச் செயல்பட்டு தனது அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவித்தார்.









