மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயிலில் ஐப்பசி துலா உற்சவம் மற்றும் கந்த சஷ்டி விழா ஒரே நேரத்தில் நடைபெறுவது தொடர்பாக இரு ஆதீனங்களுக்கு இடையே மோதல் போக்கு உருவானது.
இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை சுப்ரமணியர் சன்னதி தனித்தனியாக இயங்கி வருகிறது. கந்தசஷ்டி விழா தொடக்கத்தையொட்டி, சிறப்பு பூஜை மற்றும் வீதியுலாவிற்காக முருகர் உற்சவர் சிலையைக் கோரி தருமபுரம் ஆதீனம் தரப்பு அணுகியது. ஆனால், ஐப்பசி துலா உற்சவத்தின் ஒரு பகுதியாக பஞ்சமூர்த்திகளுடன் முருகன் சிலையும் சேர்த்து வீதியுலா செல்வது ஐதீகம் என்பதால், மாயூரநாதர் கோயிலுடன் இணைந்து வழக்கம்போல் புறப்பாடு செய்யப்படும் என திருவாவடுதுறை ஆதீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு உடன்பாடு எட்டப்படாததால், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சுப்ரமணிய தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவை மீறி திருவாவடுதுறை ஆதீனம் சிலையைக் கொடுக்க மறுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், துலா உற்சவத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்த பஞ்சமூர்த்திகளில் இருந்து முருகர் சிலையைத் தாங்களே புறப்பாடு செய்ய முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றம் நிலவியது.
தகவலறிந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டு, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நாளை காலை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படுவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, முருகன் சிலை தருமபுரம் ஆதீன நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு கந்த சஷ்டி விழா பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, வழக்கமான துலா உற்சவ சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.









